;
Athirady Tamil News

புலம்பெயர் இளையோருக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

0

சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே.., ஒரு சக்தி பிறக்கிது மூச்சினிலே” என்ற மகாகவி பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி, சுவிஸ்லாந்தில் வாழும் இளையோருக்கும் இலங்கைக்கும் இடையிலான உணர்வு ரீதியான பிணைப்பினையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், புலம்பெயர் இளையோர் தமக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி பல்வேறு துறைகளிலும் தம்மை தகவமைத்துள்ளதாக பெருமையுடன் சுட்டிக்காட்டிய அமைச்சர், பொருளாதார முதலீடுகளை மாத்திரமன்றி நவீன தொழில்நுட்ப அறிவுசார் முதலீடுகளையும் புலம்பெயர் இளையோரிடம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்து தூதரகத்தினால் நேற்று(31.07.2024) ஏற்பாடு செய்யப்பட்ட சுவிஸ்லாந்தின் 733 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இலங்கை அரசின் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“சுவிஸ்லாந்தின் சுதந்திர தின நிகழ்வில், அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பாகவும், எமது அரசாங்கத்தின் சாரபாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் கலந்து கொள்ள கிடைத்த பெருமைமிகு தருணத்தில், சுவிஸ்லாந்தின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது அதனை உடனடியாக அங்கீகரித்த நாடுகளுள் சுவிஸ்லாந்தும் ஒன்று என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தற்போது சுவிஸ்லாந்தை சேர்ந்த பல நிறுவனங்கள் தமது முதலீடுகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறை, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், அதேபோன்று வர்த்த ரீதியான முதலீடுகள் என பலவேறு துறைசார் முதலீடுகளாக அவை அமைந்துள்ளன. இவை இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பதுடன் வேலைவாய்ப்புக்களையும் வழங்குகின்றன.

இலங்கையின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான விடயங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் காணப்படும் புரிந்துணர்வையிட்டு பெருமையடைகின்றோம்.

இலங்கையின் பிரதான வருமான மார்க்கங்களில் ஒன்றான சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்கு சுவிஸ்லாந்து தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

சுவிஸ்லாந்தின் ஒத்துழைப்பானது, பொருளாதார அபிவிருத்தி என்பதற்கு அப்பால், இலங்கை மக்களின் வாழ்கைத்தரம், வாழ்வாதாரம், நிலையான சமாதானத்தினை உறுதிப்படுத்தல் போன்றவற்றிலும் அவதானம் செலுத்த வேண்டும்.

அதுமாத்திரமன்றி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பூகோள ரீதியான சவால்களையும் பரஸ்பர புரிந்துணர் மற்றும் ஒத்துழைப்புடன் எதிர்கொள்ள வேண்டும்.

ஆக, இலங்கை – சுவிஸ்லாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, ஒத்துழைப்பு போன்ற அனைத்தும் இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் நன்மைகளை உருவாக்கும் வகையில் முன்கொண்டு செல்லப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.