ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு : இராணுவ பிரிவு தளபதியை கொன்றது இஸ்ரேல்
கடந்த மாதம் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜூலை 13 அன்று கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஒரு கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டெய்ஃப் இலக்கு வைக்கப்பட்டார்.
அவரது மரணத்தை ஹமாஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இஸ்மாயில் ஹனியா படுகொலைக்கு பின்னர் வந்த அறிவிப்பு
தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
“காசாவின் ஒசாமா பின்லேடன்”
ஹமாஸ் தளபதி முகமது டெய்ஃப் “காசாவின் ஒசாமா பின்லேடன்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோ காலன்ட் (Yoav Gallant) தெரிவித்துள்ளார்.
இவரது மரணம் “காசாவில் ஹமாஸை அகற்றும் செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஹமாஸ் அமைப்பினர் சரணடையவேண்டும் அல்லது அவர்கள் ஒழிக்கப்படுவார்கள். கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி படுகொலைக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் ஆகிய இருபகுதியினரையும் ஒழிக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.