;
Athirady Tamil News

பற்றி எரியும் மத்திய கிழக்கு..! உலகப் போராக மாறுமா ஹமாஸின் தலைவர் படுகொலை

0

சர்வதேச அரசியலில் எப்போதுமே பதற்றமான பிராந்தியமான மத்திய கிழக்கில் அண்மைய நிகழ்வுகள் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளன.

ஈரானில் ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) தலைநகர் டெஹ்ரானில் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரானில் உச்ச அதிகாரம் பெற்ற அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி, ‘ஹனியே கொலைக்கு பழிவாங்க வேண்டியது டெஹ்ரானின் கடமை’ என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் நிச்சயம் வருத்தப்படும்

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் கத்தார், “ஹனியே மரணம் பேச்சுவார்த்தையை ஆபத்தான சூழலுக்கு இட்டுச்செல்லும். பேச்சுவார்த்தையில் ஹனியே முக்கிய பங்காற்றி வந்தார்” என தெரிவித்துள்ளது.

‘ஹனியேவை கோழைத்தனமாக கொலை செய்தமைக்காக இஸ்ரேல் நிச்சயம் வருத்தப்படும்’ என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளார்.

ஈரான் தனது பிராந்தியத்திற்கான ஒருமைப்பாடு, பெருமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்.

இரானின் வெளியுறவு துறை அமைச்சகத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘ஹனியாவின் இரத்தம் நிச்சயம் வீண் போகாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நிச்சயம் இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த மரணம் ஈரான் – பாலத்தீன் இடையிலான ஆழமான மற்றும் பிரிக்க முடியாத பிணைப்பை மேலும் வலிமையாக்கும்’ என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய அளவில் மோதல் வெடிக்காது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பளிங்கென் (Antony Blinken) இதுகுறித்து பேசுகையில், ‘ நடந்த நிகழ்வு குறித்து நான் எதுவும் ஊகிக்க விரும்பவில்லை. ஆனால், போர் நிறுத்தம் கொண்டுவர தொடர்ந்து அழுத்தம் தரப்பட வேண்டும்’ என்றார்.

ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதலின் விளைவாக, காஸாவில் உள்ள குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பாலஸ்தீனர்கள் ஒவ்வொரு நாளும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். என கூறியுள்ளார்.

சக்திவாய்ந்த நாடுகள் கண்டனம்
இஸ்மாயில் ஹனியே , ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்களைத் தீர்ப்பதற்கு மத்தியஸ்தராக பெரும் பங்காற்றியவர் என மிதவாத விமர்சகர்களால் பாராட்டப்பட்டார்.

அத்தகைய தலைவர் ஈரான் தலைநகரில் சிறப்பு இராஜதந்திர நிகழ்வின் போது படுகொலை செய்யப்பட்டிருப்பது ஈரானைப் போருக்கு இணைக்கும் மிகவும் தீவிரமான முயற்சி என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த கொலைக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல சக்திவாய்ந்த நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.