வெனிசுவேலாவில் தொடரும் அமைதியின்மை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வெனிசுவேலாவில் (Venezuela) ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடரும் நிலையில், அங்குள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ (Nicolas Maduro) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பலர் கைது
இந்தநிலையில் அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
அதேநேரம், அமெரிக்காவின் (USA) தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, வெனிசுவேலாவில் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.