வயநாட்டில் 36 மணி நேரத்தில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்த ராணுவ வீரர்கள் – குவியும் பாராட்டு
நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை பகுதியில் 36 மணி நேரத்தில் 200 ராணுவ வீரர்கள் 90 அடி நீளம் உள்ள பாலப்பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர் .
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் உள்ள முண்டக்கை சூழல் மழை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3வது நாளாக மீட்பு பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன. ராணுவ வீரர்கள் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர் தன்னார்வலர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமன்றி மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் மண்ணில் புதைந்த உடல்கள் மிகுந்த சவாலோடு மீட்டு வரும் மீட்பு குழுவினர் இருவிழிஞ்சி ஆற்றைக் கடக்க பாலம் இல்லாமல் ஆபத்தான முறையில் நிலச்சரிவு பகுதிகளை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தினர் 200 பேர் நேற்று காலை 6 மணி முதல் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். ராட்சத இரும்புகளைக் கொண்டு 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பாலப் பணிகளை தொடங்கினர்.
கொட்டும் மழையிலும் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 6:00 மணியிலிருந்து இன்று மாலை 6 மணி வரை என 36 மணி நேரம் இடைவிடாது பணி செய்து தற்காலிக பாலத்தை வெற்றிகரமாக ராணுவத்தினர் கட்டி முடித்தனர். உடனே ராணுவ வாகனம் சோதனை செய்யப்பட்டது.
பாலப்பணிகள் முடிந்தவுடன் சேறுசகதி ஆடைகளோடு இராணுவ வீரர்கள் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர். பாலப்பணிகள் முடிந்துள்ளதால் சூரல் மலையில் இருந்து முண்டக்கை பகுதிக்குச் சென்று அங்க மீட்பு பணிள் மேற்கொள்ளப்படும்.
கனரக வாகனங்களும் தற்காலிக பாலம் வழியாக ஆற்றை கடந்து செல்வதால், அங்கும் மீட்பு பணிகள் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.