வயநாடு நிலச்சரிவு: 27 மாணவர்கள் பலி, 23 மாணவர்கள் காணவில்லை
கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தோரின் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ள நிலையில், முண்டக்கை கிராம நிலச்சரிவில் 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் இறந்துள்ளனர், 23 மாணவர்களை காணவில்லை என கேரள பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை(ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.
மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன.
ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், வயநாடு முண்டக்கை, வெள்ளரிமலை கிராம நிலச்சரிவில் 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் மற்றும் 76 பெண்கள் இறந்துள்ளனர். மேலும் 23 மாணவர்களை காணவில்லை என கேரள பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வின் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, நிலச்சரிவு நேரிட்டு 4 ஆவது நாளில் படவெட்டி குன்னு என்ற இடத்தில் வசித்து வந்த தங்களது உறவினர்களை காணவில்லை என்று மக்கள் மீட்புப் படையினரிடம் தெரிவித்ததை அடுத்து ராணுவ வீரர்கள் அங்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட போது, சேற்றில் சிக்கிக்கொண்டிருந்த 2 ஆண்கள், 2 பெண்கள் என நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் இரண்டு அடிக்கும் மேல் சேறும் சகதியுமாக நிறைந்து காணப்படுவதால் பல உடல்கள் சிக்கியிருக்கும் என அஞ்சப்படுகிறது. அதே வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இடைவிடாத மழை மற்றும் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், 190 அடி நீளமுள்ள பெய்லி பாலம் சமீபத்தில் முடிவடைந்ததன் மூலம் அந்த பகுதியில் மோப்ப நாய்கள் உதவியுடன் உயிருடன் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உடல்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மிக மோசமான பாதிப்புக்குள்ளான முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உட்பட கனரக இயந்திரங்கள் செல்வதற்கு பெய்லி பாலம் உதவுகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளான அட்டமலை மற்றும் முண்டக்கை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமம், வெள்ளரிமலை மற்றும் ஆற்றங்கரை பகுதி உட்பட ஆறு மண்டலங்களாக தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இஸ்ரோவின் ரிசார்ட் சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலச்சரிவு பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நிலச்சரிவால் மண்ணில் புதைந்துள்ள உடல்களை கண்டறிவதற்காக தில்லியில் இருந்து ட்ரோன் அடிப்படையிலான ரேடார் சனிக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன் முன்னதாக தெரிவித்தார்.