டொனால்டு ட்ரம்ப் வெற்றிக்காக காத்திருக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதி: கசிந்த தகவல்
டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொள்கை முன்னுரிமைகளாக
அத்துடன் புதிய பேச்சுவார்த்தை உத்தியை வகுக்க வடகொரியா களமிறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தங்களது முதன்மையான வெளிவிவகாரக் கொள்கை முன்னுரிமைகளாக வடகொரியா அமைத்துள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை முன்னெடுப்பதுடன், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானால் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கவும் வடகொரியா திட்டமிட்டு வருவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்கள் மீதான தடைகளை நீக்கவும் பயங்கரவாதத்தின் ஆதரவாளர் என்ற பெயரை நீக்கி பொருளாதார உதவியை பெறுவதற்கும் வடகொரியா தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
தடைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை காரணமாகவே 2019ல் டொனால்டு ட்ரம்புடன் வியட்நாமில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையானது கைவிடப்பட்டது.
மேலும், கிம் ஜாங் உன்னுக்கு சர்வதேச உறவுகள் மற்றும் தூதரக விவகாரம் பற்றி அதிகம் தெரியாது என்பதாலையே அவர் வாய்ப்புகளை தவறவிட்டார் என்றும் அந்த அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் ஆதரவுடன்
ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம், வடகொரியா அதன் ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் உதவி பெற்றது. அத்துடன் இனி சர்வதேச தடைகளை ரஷ்யாவின் ஆதரவுடன் முறியடிக்கவும் முடியும்.
மட்டுமின்றி, ரஷ்யா உடனான நெருக்கத்தை குறிப்பிட்டு அமெரிக்காவிடம் அதிகமாக பேரம் பேசலாம் என்பதே அவர்களின் திட்டம் என்றும் வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியாவில் தஞ்சமடைந்துள்ள அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெல்ல வேண்டும் என்பதே வடகொரியாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.