;
Athirady Tamil News

சிதைந்த நிலையில் சிறுமியின் உடல்.., அடையாளம் தெரியாமல் 4 குடும்பத்தினர் உரிமை கேட்டு வரும் சோகம்

0

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த சிறுமியின் உடலை பார்த்து 4 குடும்பத்தினர் உரிமை கேட்டு வரும் சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300-க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில், உயிழந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்துள்ளனர். குடும்பத்தினர் அடையாளம் காட்டுவதை வைத்து அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த நிலச்சரிவில் பாறைகள் உருண்டோடியதாலும், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாலும் இறந்தவர்களின் உடல்கள் சிதைந்து இருப்பதால் அடையாளம் காணவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிறுமியின் உடல்
இந்நிலையில், முண்டக்கை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் உடல் மேப்பாடி மருத்துவ மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இவரது உடல் மிகவும் சிதைந்து இருந்துள்ளது.

அப்போது, சிறுமியின் உடலை முதலில் ஒரு குடும்பத்தினர் வந்து தங்களது குழந்தை என கூறவும், அவர்களிடம் சிறுமியின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதே நேரத்தில் மற்றொரு குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலுக்கு உரிமை கேட்டு வந்துள்ளனர்.

இந்த இருவரின் குடும்பத்துடன் சமரசம் செய்து கொண்டிருக்கும் போதே இன்னும் 2 குடும்பத்தினர் வந்து உரிமை கேட்டுள்ளனர்.

இதில், முதலில் உரிமை கேட்ட குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலை அடக்கம் செய்ய மாயணத்திற்கே கொண்டு சென்றனர். பின்னர், அவர்களிடம் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சிறுமிக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டிய அவசியத்தை அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறினார். இவ்வாறு ஒரு உடலுக்கு பல குடும்பங்கள் சொந்தம் கேட்டு வரும் சோக சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு அமைப்பை கொண்டு வர அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.