;
Athirady Tamil News

வயநாடு நிலச்சரிவு: கடுங்குளிரில் தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மீட்ட வனத்துறை!

0

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித்தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். கடும் குளிரில் உணவின்றி சிக்கித்தவித்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் இன்றி தவித்துக்கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தைகள் உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சூரல்மலை அருகேயுள்ள அட்டமலை என்ற வனப்பகுதியும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அட்டமலை வனப்பகுதியில் இருந்த மலைவாழ் மக்கள் சிலர், செங்குத்தான மலையில் இருந்து கீழே இறங்கி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் ஒருபுறம் மீட்பு பணியில் இறங்கிய வேளையில், வனத்துறையினரும் தேடுதல் பணியை தொடங்கினர். குறிப்பாக அட்டமலை வனப்பகுதியில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என கல்பெட்டா வனத்துறை அதிகாரி ஆசிஃப் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அட்டமலை பகுதியில் ஒரு குழந்தையுடன் பெண் ஒருவர் உணவு தேடி அலைந்ததை வனத்துறை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரது பெயர் சாந்தி என்பதும், தனது கணவர் கிருஷ்ணன் மற்றும் 3 குழந்தைகள் மலையின் கீழ் சிக்கித்தவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண் அளித்த தகவலின் அடிப்படையில், மிகவும் கரடு முரடான மலைப்பகுதிகளில் இறங்கிய வனத்துறை அதிகாரிகள், அந்த பெண்ணின் கணவர் கிருஷ்ணன் மற்றும் அவரது 3 குழந்தைகளை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். ஏறத்தாழ 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் இருப்பதை கண்டறிந்தனர். அப்போது அவர்கள் உணவு, குடிநீர் இன்றி மிகவும் பசியோடு துவண்டு போய் இருந்ததும், குடும் குளிரால் குழந்தைகளின் உடல்நிலை மோசமாக இருந்ததையும் வனத்துறை அதிகாரிகள் உணர்ந்தனர்.

இதையடுத்து, அவர்கள் கொண்டு சென்ற ரொட்டிகளை கொடுத்து குழந்தைகள் ஆசுவாசப்படுத்தினர். பின்னர் தங்களிடம் இருந்த துணிகளை கிழித்து குழந்தைகளின் உடல்களில் போர்த்தியும், மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு மூலம் நெருப்பு மூட்டியும் அவர்களை பாதுகாத்தனர்.

பின்னர் கிருஷ்ணன், அவர்களது 3 குழந்தைகளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். கீழே இறங்கினால் திரும்பி வருவோமா என தெரியாத நிலையிலும், உயிரை பணயம் வைத்து மலையில் இறங்கி, மலைவாழ் குடும்பத்தினரை காப்பாற்றிய இந்த வனத்துறை அதிகாரிகளின் செயல் மிகவும் போற்றப்பட வேண்டியது தான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.