புதிய நாடாளுமன்ற கட்டத்தில் ஒழுகிய மழை நீர் – மத்திய அரசு விளக்கம்!
புதிதாக கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் ஒழுகியது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் வைத்த நிலையில், மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில், கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த நாடாளுமன்ற கட்டிடத்தின் வராண்டா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கசிந்தது. மேலும், நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த காட்சிகளை பகிர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சிறிய கசிவுதான் ஏற்பட்டதாகவும் அது உடனடியாக கண்டறியப்பட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது. சூரிய ஒளி அதிகளவில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்ணாடி குவிமாடங்களில் பிசின் போன்ற பொருட்கள் பெயர்ந்ததால் இந்த கசிவு ஏற்பட்டதாகவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே தேங்கி நின்ற மழைநீரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.