கமலா ஹாரிஸுடன் நேரலை விவாதம்… நாள் குறித்த டொனால்டு ட்ரம்ப்
ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் கமலா ஹாரிஸுடன் நேரலை விவாதத்திற்கு தாம் தயாரென்று டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
விவாதம் ரத்து
எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி பென்சில்வேனியாவில் உள்ள அரங்கம் ஒன்றில், இந்த விவாதம் நடக்க இருப்பதாகவும் டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கமலா ஹாரிஸ் தரப்பில் இதுவரை இது குறித்து பதிலளிக்கப்படவில்லை.
ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து வெளியேறியதால், செப்டம்பர் 10ம் திகதி நடக்கவிருந்த விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விதிகள் அனைத்தும் அட்லாண்டாவில் முந்தைய விவாதத்தைப் போலவே இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2020 தேர்தலில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் தடுமாற, அதன் பின்னர் போட்டி மிகுந்த மாகாணங்களில் பென்சில்வேனியாவும் இடம்பெற்றது. மட்டுமின்றி, ஜூலை 6ம் திகதி பரப்புரை கூட்டம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் டொனலாடு ட்ரம்ப் நூலிழையில் உயிர் தப்பியிருந்தார்.
கமலா ஹாரிஸ் வெளிப்படை
இதனிடையே, செப்டம்பரில் விவாதம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று டொனால்டு ட்ரம்புக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார் கமலா ஹாரிஸ்.
ஜூன் 27ல் நடந்த நேரலை விவாதத்தில் ஜோ பைடன் கடும் பின்னடைவை சந்திக்க, அடுத்த நேரலை விவாதம் எப்போது என டொனால்டு ட்ரம்ப் அடிக்கடி சீண்டி வந்தார்.
இந்த நிலையிலேயே தாம் விவாதத்திற்கு தயார் என கமலா ஹாரிஸ் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் அதற்கான பதிலை டொனால்டு ட்ரம்ப் தற்போது அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.