குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
குவைத்தில் கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குவைத் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினை தொடர்ந்து குறித்த குழுவினர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திரச்சாப்பா லியனகே, சமனலி பொன்சேகா, ஜோலி சியா, உபேகா நிர்மானி ஆகிய இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் 26 பேர் குவைத் பொலிஸாரால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இசை நிகழ்ச்சி
எதேர அபி என்ற அமைப்பினால் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இசை நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறாமையினால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பாடகர்களைத் தவிர, இசை நிகழ்ச்சிக்கு வருதைந்த இசைக்குழுவினர் மற்றும் அதனை ஏற்பாடு செய்தவர்கள், இசைக்குழுவின் இசைக்கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டின் பேரில், இவர்களில் 24 பேர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாகவும், ஏற்பாட்டுக் குழுவில் உள்ள இருவர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.