;
Athirady Tamil News

தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதிகளின் வீடுகள்! காரணம் நாமல்

0

போராட்டக் காலக்கட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை சிறந்தது என்று நாமல் ராஜபக்ச தெரிவிக்கும் கருத்து முறையற்றது. கடந்த 2022 மே மாதம் 9ஆம் திகதி நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) உள்ளிட்ட தரப்பினர் செய்த தவறினால் தான் எமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன(S.M.Chandrasena) தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரணில் தலைமையிலான அரசாங்கம்
தொர்நதும் தெரிவிக்கையில்,

அனுராதபுரம் மாவட்ட மக்களின் அபிலாஷைக்கு அமைவாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தேன். நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டது.

தற்போதைய முன்னேற்றத்தை தொடர வேண்டுமாயின் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று சாதாரண மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

மீண்டும் பரீட்சித்துப் பார்க்கும் நிலையில் நாடு இல்லை. நாட்டு மக்கள் தெளிவாக உள்ளார்கள்.

2022ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின்போது மாறுபட்ட அரசியல் கொள்கையுடைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்துக்கு நாங்கள் நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்கினோம்.

நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை ஏற்க போவதில்லை. எமது மாவட்ட மக்களின் தீர்மானத்துக்கு அமையவே ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்துள்ளேன். எனது தீர்மானத்தில் மாற்றமில்லை.

நாமலின் அராஜகம்
கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

பொதுஜன பெரமுனவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரகலயவின்போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை சிறந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளமை முறையற்றது.

நாமல் ராஜபக்ச உட்பட தரப்பினர் 2022.05.09ஆம் திகதி செய்த தவறினால் தான் எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவர்கள் தான் போராட்டக்களத்துக்கு தாக்குதல் நடத்தும் வகையில் அரசியல் கூட்டங்களை நடத்தினார்கள்.

இதன் பின்னர் தான் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவும் படுகொலை செய்யப்பட்டார். இவர்கள் இழைத்த குற்றத்துக்கு நாங்கள் தண்டனை அனுபவித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.