கன்வார் யாத்திரை: பிகாரில் மின்சாரம் பாய்ந்து 9 பேர் பலி!
கன்வார் யாத்திரைக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் புகழ்பெற்ற கன்வார் யாத்திரை நடைபெற்று வருகின்றது. பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கங்கையில் புனித நீர் எடுத்துச் சென்று, தங்கள் பகுதியில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றிரவு 11.15 மணியளவில் பிகாரில் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிஹர்நாத் கோயிலுக்கு ஜல அபிஷேகம் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வைசாலி மாவட்டத்தில் சுல்தான்பூர் கிராமத்தில் செல்லும்போது மின் கம்பிகள் அறுந்து காரின் மீது விழுந்தன.
இதில் அந்த காரில் பயணித்த 9 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். மேலும இருவர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வைசாலி மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்வார் யாத்திரை பக்தர்கள் உயிரிழந்ததற்கு அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.