வங்கதேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராணுவ ஆட்சி!
வங்கதேசத்தில் 2007-ஆம் ஆண்டுக்குப் பின் (சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்) மீண்டும் ராணுவ ஆட்சி அமைந்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தின் பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனா(76) இன்று(ஆக. 5) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். முன்னதாக, கடந்த ஜனவரியில் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 4வது முறையாக ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வன்முறைக் களமாக மாறியுள்ள வங்கதேசத்தில் நேற்று(ஆக. 4) சிராஜ்கஞ்ச் பகுதியில் 13 காவலர்கள் போராட்டக்காரர்களால் அடித்தே கொல்லப்பட்டிருப்பது வன்முறையின் உச்சம். இதனிடையே, ஆட்சியாளர்களின் மீது கடுங்கோபத்தில் இருக்கும் போராட்டக்காரர்கள் முன்னாள் ஷேக் ஹசீனாவின் தந்தையும் ‘வங்கதேசத்தின் தந்தை’ என போற்றப்படுவருமான முஜிபூர் ரகுமானின் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, கிளர்ச்சியாளர்களிடம் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு அந்நாட்டு ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுவரை நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஒரே நாளில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் என்னதான் நடக்கிறது?
வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிா்த்து அண்மையில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 200-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். அதன்பின் இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பின் வன்முறை படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில், இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தில் பலா் கொல்லப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் கைதானவா்களை விடுவிக்கக்கோரியும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதைக் கண்டித்து ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த சனிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவா்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனா். அப்போது போராட்டக்காரா்களுக்கும், வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சியின் மாணவா் அணியான சத்ரா லீக் மற்றும் காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரா்களைப் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை சனிக்கிழமை நிராகரித்த போராட்டக்காரா்கள், ஹசீனா தலைமையிலான அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காவல் துறையினா் உள்பட 94 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா். இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக டாக்கா உள்பட பல்வேறு நகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.