தரைமட்டமான கிராமத்தில் சொந்தங்களை தேடி அலையும் முதியவர்.., நெஞ்சை உலுக்கும் சம்பவம்
வயநாடு நிலச்சரிவில் மாயமான தனது சொந்தங்களை முதியவர் ஒருவர் தேடி அலையும் காட்சி வேதனையை கொடுக்கிறது.
நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினரை இழந்தவர்கள் என அனைவரும் தங்களுக்கு வேண்டியவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் பிழைத்திருக்க மாட்டார்களா என்று கண்களில் நீருடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதியவரின் தேடல்
இந்நிலையில், தனது குடும்ப உறுப்பினர்களை முதியவர் ஒருவர் கிராமத்தில் தேடி அலைகிறார். முண்டக்கை கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கருப்பையா.
இவர், தனது மனைவி, மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தன்னுடைய அனைத்து உறவுகளையும் தொலைத்து விட்டு பெரும் ஏக்கத்துடன் அவர்களை தேடி வருகிறார்.
முகாம்களில் அவர்களை காண முடியாததால் தரை மட்டமான கிராமத்திற்குள் அவர்கள் கிடைக்க மாட்டார்களா என்று தேடி கொண்டிருக்கிறார்.
ஒருவேளை அவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் முகத்தை காண வேண்டும் என்று பொக்லைன் இயந்திரங்கள் பூமியை தோண்டுவதை கண் சிமிட்டாமல் பார்த்து வருகிறார்.
71 வயதிலும் தள்ளாடி கொண்டே தனது குடும்பத்தை தேடும் முதியவரின் ஏக்கம் பெருந் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.