வயநாடு சோகம் : இருந்த அடையாளமே தெரியாமல் இடிந்த 500 வீடுகள்.. பள்ளதாக்கு போல் மாறிய முண்டக்கை
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 360-ஐ கடந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படையினர், கேரளா காவல்துறை மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக இடிந்து அழிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக முண்டக்கை பகுதியில் 540 வீடுகள் இருந்த நிலையில், தற்போது 40-க்கும் குறைவான வீடுகளே மிஞ்சியிருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் சூரல்மலை பகுதியில் 600 வீடுகளும், அட்டமலை பகுதியில் 68 வீடுகளும் முற்றிலுமாக இடிந்துவிட்டன. தெர்மல் ஸ்கேன் மூலமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த உடலும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி வயநாட்டிற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் சென்றுள்ளனர். ராணுவ வீரர்களுடன் இணைந்து தன்னார்வலர்கள் பல்வேறு வகையான மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே வயநாட்டில் அடையாளம் தெரியாத உடல்களுக்கு சர்வ மத அடிப்படையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று புதைக்கப்பட்டன.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியான 60-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இதனையடுத்து அடையாளம் தெரியாத உடல்களை 72 மணிநேரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என கேரள மாநில அரசு, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களுடன் உத்தரவிட்டது. இந்தநிலையில் புதுமலையில் 29 உடல்கள் மற்றும் 85 உடல் பாகங்கள் புதைக்கப்பட்டன.