பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை
பங்களாதேஷில்(bangladesh) தொடரும் வன்முறையை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவை(Khaleda Zia) விடுவிக்க பங்களாதேஷ் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி சஹாபுதீன் தலைமையிலான கூட்டம் “வங்காளதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவி பேகம் கலீதா ஷியாவை உடனடியாக விடுவிக்க ஒருமனதாக முடிவு செய்ததாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு திங்களன்று வௌியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் முக்கிய கூட்டம்
இராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகள், பிஎன்பி கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இரண்டு முறை பங்களாதேஷின் பிரதம மந்திரியாக இருந்த 78 வயதான ஷியா 2018 இல் ஊழலுக்காக 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அனாதை இல்ல நன்கொடையில் முறைகேடு
ஒரு அனாதை இல்ல அறக்கட்டளைக்காக வழங்கப்பட்ட நன்கொடைகளில் சுமார் $250,000 மோசடி செய்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த வழக்குகள் சோடிக்கப்பட்டவை என்றும் ஷியாவை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றும் பிஎன்பி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.