பங்களாதேஷ் சிறைச்சாலையில் வெடித்தது மோதல்:500 ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
பங்களாதேஷில்(bangladesh) மாணவர் போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டில் அமைதியின்மை தொடர்கிறது.
தற்போது ஷெர்பூரில் உள்ள பாரிய சிறையில் மோதல் வெடித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் 596 கைதிகள் தப்பியுள்ளனர். தப்பியோடிய கைதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய எல்லை பகுதியில் அதிக பாதுகாப்பு
இந்த சிறைச்சாலை இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லை பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு
எல்லைப் பாதுகாப்புப் படையானது (பிஎஸ்எஃப்) எல்லையில் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் பாதுகாப்புப் பணியை அதிகரித்துள்ளது. தப்பியோடியவர்களில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.