பங்களாதேஷில் தீவிரமடையும் வன்முறை: தீயில் கருகி உயிரிழந்த 24 பேர்
பங்களாதேஷில் (Bangladesh) போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலையில் போராட்டக்காரர்கள் ஜோஷோர் மாவட்டத்திலுள்ள உணவகம் ஒன்றை தீவைத்து கொளுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், அவாமி லீக் கட்சியின் (Awami League) தலைவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
இதன்போது, உணவகத்திற்குள் இருந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்ததுடன் 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இட ஒதுக்கீடு
பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பிரதமர் பதவி விலக வேண்டும் என போராட்டத்தை அவர் பக்கம் திருப்பினர்.
குறித்த போராட்டம் வன்முறை ஆக வெடித்து கட்டுக்கடங்காத வகையில் சென்ற நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவி விலகிவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி தற்பொழுது இந்தியாவில் (India) தங்கியுள்ளார்.
இந்தநிலையில், போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்களை சூறையாடுவதுடன், தீ வைத்து சேதப்படுத்தியும் வருகின்றார்கள்.