மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று(06)நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது,கடந்த காலாண்டு கலந்துரையாடலின் போது இனங்காணப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தியதனூடாக ஏற்பட்ட முன்னேற்றங்கள்,சிரமங்கள் தொடர்பாகவும் புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகள் அவற்றுக்கான தீர்மானங்கள் குறித்தான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை, இடைவிலகல் தொடர்பாக ஆராயப்பட்டு மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
முன்பள்ளிகளுக்கான காலை உணவு வழங்குதல்,மாணவர்களின் போசாக்கு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
சுகாதாரம், பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள், சிறுவர் கழக செயற்பாடுகள், சிறுவர் இல்லங்கள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதனைவிட சட்டவிரோத செயற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் பாலியல் வன்முறை தொடர்பில் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கான உடனடி உதவிகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியமான வழிமுறைகள் ஆராயப்பட்டன.அத்தோடு இவ்வுதவிகளை வழங்க புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,உதவிபிரதேச செயலாளர்கள்,பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள்,பொலிஸ் பொறுப்பதிகாரிகள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள்,மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், உளவளத் துணை உத்தியோகத்தர்கள்,சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர்கள்,தனியார் கல்விநிலையங்களின் நிர்வாகிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.