;
Athirady Tamil News

தீப்பற்றி எரியும் பங்களாதேஷ்…! இடைக்கால அரச தலைவராக நோபல் பரிசு பெற்ற நிபுணர்

0

பங்களாதேஷில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் (Muhammad Yunus) நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிசை நியமித்து அந்நாட்டு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பங்களாதேஷில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை
ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சியில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது.

இந்நிலையில் தலைநகர் டாக்கா (Dhaka) உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை நடைபெற்ற மோதலில் 109 பேர் உயிரிழந்தனர்.

இத்துடன் போராட்டம் தீவிரமடைந்த கடந்த 16-ஆம் திகதியிலிருந்து திங்கள்கிழமை வரையிலான 21 நாட்களில் போராட்டம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 440-ஆக உயா்ந்துள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவி விலகல் செய்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவரை மத்திய அரசு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளது. எனினும் அவா் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளாா் என்ற விபரம் வெளியாகவில்லை.

இடைக்கால அரசு
பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா பதவிவிலகல் செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தளபதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகளுடன் அதிபர் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிசை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.