நாமலை ஜனாதிபதி வேட்பாளாராக களமிறக்கியதன் பின்னணி இதுதானா? முக்கியஸ்தர் தகவல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஜனாதிபதியாக்கி நாமலை பிரதமராகும் திட்டமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அறிவிப்பு என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரணில், ராஜபக்ச குடும்ப சார்பற்ற வேட்பாளர் என்ற தோற்றப்பாட்டை காட்டி சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகளை முழுமையாக ரணில் பெறுவதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டு பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக நாமலை நிறுத்தி மொட்டுக்கு கிடைக்கும் வாக்குகளில் இரண்டாவது விருப்பு இலக்க தெரிவை ரணிலுக்கு வழங்குமாறு கேட்கும் திட்டத்தின் ஊடாக பிரதமராகும் எண்ணமே நாமலின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 80% நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ரணிலை ஆதரிக்கும் வியூகத்தை அமைத்துக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷ தனது மகனின் வேட்பாளர் அறிவிப்பை பெரும் ஆரவாரங்கள் இல்லாமல் சாதாரணமாக நடாத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் பெரும் எடுப்பில் பலரது ஆதரவுகளையும் பெற்று வேட்பாளர் அறிவிப்பு நடாத்திய ராஜபக்ச குடும்பம் மிக சாதாரண நிலைக்கு சென்றமை கள நிலைமையில் மக்களிடம் ராஜபக்ச குடும்பத்திற்கான ஆதரவு மிக குறைவாக இருப்பதையே காட்டுகின்றது.
ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றக் கூடிய ஒருவர் ரணில் விக்கிரமசிங்க தான் என்பதை மஹிந்த நம்புவதால் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெருந்தொகையான நாடாளுமன்ற உறுப்பினர்களை ரணிலுக்கு ஆதரவு வழங்க அனுப்பியுள்ளார்.
அத்தோடு 2030 ஆண்டு நாமல் ஜனாதிபதி ஆவதற்கு கட்சி பலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் தற்போதைய சூழ்நிலையில் நாமலுக்கு ஜனாதிபதி கனவு சாத்தியமாகாது என்ற உண்மை மஹிந்தவுக்கு தெரிந்தும் பிரதமர் பதவியில் அமர்வதற்கான பலத்தை தக்க வைப்பதற்காகவே நாமல் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார் எனவும் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.