;
Athirady Tamil News

மூன்று நாடுகளை சேர்ந்த மூவர்… பிரித்தானியத் தெருக்கள் கொழுந்துவிட்டெரிய காரணம் அம்பலம்

0

பிரித்தானியாவில் தீவிர வாலதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களை முன்னெடுக்க முதன்மையான காரணம் என்ன என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

மூன்று நாடுகளைச் சேர்ந்த மூவர்
குறித்த கலவரங்களின் தொடக்கம் ஒரு இணைய பக்கத்தில் வெளியான தவறான தகவல் என்றும், தொடர்புடைய தகவலை பதிவு செய்தவர்கள் மூன்று நாடுகளைச் சேர்ந்த மூவர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதில் ஒருவர் பாகிஸ்தானில் லாகூர் நகரில் வசிப்பவர். இன்னொருவர் கனடாவில் வசிக்கும் ஹொக்கி வீரர், மூன்றாவது நபர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் வசிப்பர்.

இவர்கள் மூவருமே தொடர்புடைய இணைய பக்கத்தில் Southport தாக்குதல்தாரி குறித்து தவறான தகவலை பதிவு செய்தவர்கள். அதாவது அந்த 17 வயது நபர் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் எனவும், கடந்த ஆண்டு சிறு படகு ஒன்றில் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் நுழைந்தவர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, அந்த 17 வயது நபர் இஸ்லாமியர் என்றும் அவர்கள் உறுதிபட தெரிவிக்க, தொடர்புடைய தகவல் தீவிர வலதுசாரிகளிடம் தீயாக பரவியது. இதன் காரணமாகவே மசூதிகள் தாக்கப்பட்டதுடன், இஸ்லாமிய சமூக மக்களும் தாக்குதலுக்கு இலக்காகினர்.

இந்த நிலையில் தவறான தகவலை வெளியிட்டு, பிரித்தானியா முழுவதும் கலவர பூமியாக மாற்றிய அந்த மூவர் தொடர்பிலும், அந்த இணைய பக்கம் தொடர்பிலும் வெளியான மேலதிக தகவல்களில், அந்த செய்தி இணையபக்கமானது அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறது.

Southport தாக்குதல் சம்பவம்
அதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது. தொடர்புடைய இணைய பக்கத்தின் தலைமை ஆசிரியராக செயல்படுபவர், அமெரிக்கரான கெவின். இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா மட்டுமின்றி, பிரித்தானியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்தும் 30க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆனால் Southport தாக்குதல்தாரி குறித்து தவறான தகவலை லாகூரை சேர்ந்த Farhan வெளியிடவில்லை என்றும், பிரித்தானியாவில் இருந்து பணியாற்றும் குழுவினரே செய்தி வெளியிட்டுள்ளதாகவும் கெவின் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானியாவில் நடந்தேறும் கலவரங்களுக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ள கெவின், தங்களது நிறுவனம் உலக செய்திகளை பதிவேற்றும் ஒரு சுயாதீன டிஜிட்டல் செய்தி ஊடக வலைத்தளம் என்றும் கெவின் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடந்தேறும் பல சம்பவங்களை வெளிப்படையாக தங்கள் செய்தி நிறுவனத்தில் பதிவேற்றியுள்ளதாக கூறும் கெவின், தவறான தகவல் எதையும் வெளியிட்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் டொனால்டு ட்ரம்ப் மீதான தாக்குதல்தாரி குறித்தும் அந்த இணைய பக்கத்தில் தவறான தகவலே வெளியிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, Southport தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் பல தவறான தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

சமூக ஊடகத்தில் வெளியாகும் தகவல்களை அப்படியே உண்மை என நம்பி இவர்கள் செய்தியாக்கியுள்ளனர். Southport தாக்குதல் சம்பவம் மட்டுமின்றி, கோவிட் குறித்தும், தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பிலும், காலநிலை மாற்றம் குறித்தும் தவறான தகவல்களை மட்டுமே இவர்களின் இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.