பரபரப்பாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : நேரடி விவாதங்களுக்கு ட்ரம்ப் தயார்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) 3 விவாதங்களுக்கு தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதாவது அமெரிக்காவின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களில் 3 விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி Fox News இல் முதல் விவாதத்திற்கும், செப்டம்பர் 10ஆம் திகதி NBCயில் இரண்டாவது விவாதத்திற்கும், செப்டம்பர் 25ஆம் திகதி மூன்றாவது விவாதத்திற்கும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சார கூட்டமைப்பு
அத்துடன் ஒளிபரப்பு நிறுவனங்களின் முதலாளிகள் இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், இருப்பினும் நாங்கள் அதை உறுதிப்படுத்தவில்லை என்று அறிவித்துள்ளார்.
அத்துடன் கமலா ஹாரிஸின் (Kamala Harris) பிரச்சார கூட்டமைப்பின் சம்மதம் மற்றும் தயார் நிலை குறித்து அறிய ட்ரம்ப் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று விவாதங்களும் எங்கு நடைபெறும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விவரங்களை ட்ரம்ப் வெளியிடவில்லை.
விவாத திட்டமிடல்
இதேவேளை ஹாரிஸ் பிரச்சார அமைப்பு செப்டம்பர் 10ஆம் திகதி ABC News ஒளிபரப்பு நிறுவனத்துடனான விவாத நிகழ்ச்சிக்கு முன்னுரிமை வழங்க முயற்சித்து வருகிறது.
இந்த விவாத நிகழ்வானது ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் (Joe Biden) இடையில் நிர்ணயிக்கப்பட்ட விவாத திட்டமிடல் ஆகும், ஆனால் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்த விவாத நிகழ்ச்சி திட்டம் கலைக்கப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ட்ரம்ப் மற்றும் கமலா இருவரும் செப்டம்பர் 10ஆம் திகதி ABC News ஒளிபரப்பு நிறுவனத்தின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.