சாலையே இல்லாமல் வயலுக்கு நடுவே அமைக்கப்பட்ட பாலம் – குழப்பத்தில் கிராம மக்கள்
இணைப்பு சாலை இல்லாமல் வயல்வெளிக்கு நடுவே பாலம் கட்டியுள்ள சம்பவம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச் என்ற ஊரில் வயல் வெளிக்கு நடுவே 35 அடி நீளத்துக்கு இணைப்பு சாலைகள் எதுவும் இன்றி பாலத்தை மட்டுமே கட்டி உள்ளனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்க்கும் அனைவரையும் எதற்காக இந்த பாலம் என குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து பதிலளித்த அதிகாரிகள் , ராணிகஞ்ச் கிராமத்தில் இருந்து 2.5 கி.மீ தொலைவுக்கு பரமாந்தபூர் கிராம் வரை முதலமைச்சர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் அங்கு சாலை அமைக்கப்பட்ட பிறகு வயலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் தண்ணீர் செல்ல அனுமதிக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய உள்ளூர்வாசி ஒருவர், இந்த பாலம் 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இது ஏதேனும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என நினைத்தோம், ஆனால் மேற்கொண்டு எந்த வேலையும் நடைபெறாமல் அப்படியே உள்ளது என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அராரியா மாவட்ட ஆட்சியர் இனாயத் கான் உத்தரவிட்டுள்ளார்.