ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் கடமைகளுக்காக அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகங்களில் 700 உத்தியோகத்தர்களே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இந்த அதிகாரிகளின் சேவை தேவைப்படுவதாகவும், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படை
கிராம சேவை உத்தியோகத்தர்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவாதகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல் கடமைகளுக்காக சுமார் 54,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேவைப்பட்டால் மட்டுமே இராணுவத்தினரின் ஆதரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.