உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து-இருவர் படுகாயம்(video/photoes)
உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளத்திற்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையே அமைந்துள்ள அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(9) இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நெல் அறுவடை முன்னாயத்த பணியில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று சடுதியாக பிரதான வீதியை நோக்கி இரு வழி சாலையை மறித்து திரும்ப முற்பட்ட வேளை மறுமுனையில் இருந்து வேகமாக பயணம் செய்த பல்சர் ரக மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி காலில் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு கை உடைவு ஏற்பட்டுள்ளதாக விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.அத்துடன் குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர்கள் மற்றும் உழவு இயந்திர சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று பகுதியில் இருந்து வந்த 1990 சுவ செரிய அம்புலன்ஸ் காலதாமதமாக வந்தமையினால் திரும்பி சென்றது.
மேலும் இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொது இணக்கப்பாட்டுடன் சமாதானமாக செல்ல முற்பட்ட போதும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதுடன் விபத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.