புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட பிரித்தானிய மக்கள்: மனம் நெகிழ்ந்த மன்னர் சார்லஸ்
எந்த பிரித்தானியாவில் வலதுசாரிகள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதோ, அதே பிரித்தானியாவில், அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் எதிராக பொதுமக்கள் திரண்ட விடயம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
பிரித்தானிய மன்னர் சார்லசும் அப்படி புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாகத் திரண்ட பிரித்தானிய மக்களை மனம் நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.
புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட பிரித்தானிய மக்கள்
பிரித்தானியாவில் திடீரென வலதுசாரிகள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வன்முறையில் இறங்கியபோது, இது நீண்ட கால வன்மம், பிரித்தானியர்கள் மாறமாட்டார்கள் என்னும் எண்ணமே பலருக்கும் உருவானது.
ஆனால், அந்த புலம்பெயர்தல் எதிர்ப்பும் இனவெறுப்பும் கொண்ட கூட்டத்துக்கு எதிராகவும், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாகவும், பொதுமக்களில் ஒரு மாபெரும் கூட்டத்தினர் தெருக்களில் இறங்கி எதிர்ப்பைத் தெரிவிப்பதைக் காணும்போது, மனிதம் இன்னும் செத்துவிடவில்லை என்னும் மகிழ்ச்சி உருவாகியிருப்பதை மறுப்பதற்கில்லை.
இப்படிப்பட்ட முரணான சூழல் நாட்டில் நிலவும் நேரத்தில், தங்களுக்கு புலம்பெயர்ந்தோர் செய்த உதவிகளை நினைவுகூருகிறார்கள் சிலர். புலம்பெயர்ந்தோர் என் உயிரைக் காப்பாற்றினார்கள் என்கிறார் ஒரு பெண்!
மனம் நெகிழ்ந்து பாராட்டிய மன்னர்
இதையெல்லாம் நம்மைப்போலவே பிரித்தானிய மன்னர் சார்லசும் கவனித்துக்கொண்டே இருக்கிறார். இந்த வாரத் துவக்கத்தில், நாட்டில் நடப்பதை தனக்கு தொடர்ந்து அப்டெட் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் மன்னர்.
தற்போது, பிரதமர், பொலிஸ் கவுன்சில் தலைவர், பல்வேறு பகுதிகளின் தலைமைக் காவலர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசிய மன்னர் சார்லஸ், நாட்டு நடப்பு குறித்து அறிந்துகொண்டதுடன், அமைதியை நிலைநாட்டுவதற்காக பொலிசாரும் அவசர உதவிக்குழுவினரும் எடுத்துவரும் முயற்சிகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
அத்துடன், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒரு சிறிய கூட்டம் வன்முறையில் இறங்கியபோது, புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஒரு பெருங்கூட்டமாக திரண்ட பிரித்தானிய பொதுமக்களின் இரக்கத்துக்காக அவர்களை மனம் நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார் மன்னர்.
இப்படி பல்வேறு கலாச்சாரப் பின்னணிகொண்டவர்களுக்கும் பரஸ்பர மரியாதை அளிப்பதும், அவர்களைப் புரிந்துகொள்வதும், நாட்டை ஒற்றுமையாக்குவதுடன் தொடர்ந்து நாட்டை வலுப்படுத்தவும் உதவும் என்பதே மன்னரின் நம்பிக்கை என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.