7 மாதங்களில் 300 கடந்த எண்ணிக்கை… ஈரான் தொடர்பில் வெளிவரும் நடுங்கவைக்கும் தகவல்
கடந்த 7 மாதங்களில் மட்டும் 345 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரண்டு நாட்களில் 29 பேர்களுக்கு
நார்வேயில் இருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் குழு புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 29 பேர்களுக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது என்றும், ஒரே சிறையில் 26 பேர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் Volker Turk தெரிவிக்கையில், இந்த விவகாரம் மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், மிகக் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளியான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 15 பெண்கள் உட்பட 345 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் முதன்மையாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அல்லது கொலைக் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இந்த ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமான விசாரணை
மேலும், வேண்டுமென்றே கொலை செய்வதில் ஈடுபடாத குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் தரநிலைகளுக்கு முரணானது என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் செய்தித்தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, இந்த வழக்குகளில் பலவற்றில் உரிய செயல்முறை மற்றும் நியாயமான விசாரணை இல்லாதது குறித்தும் கவலைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கைதியின் குடும்பத்தினருக்கோ அல்லது சட்ட ஆலோசகருக்கோ தெரிவிக்கப்படாமல் பல மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்த ஈரான் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மரண தண்டனையை பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் பலமுறை குற்றம் சாட்டி வருகின்றன.
மட்டுமின்றி, சீனாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் விட ஈரானில் ஆண்டுதோறும் அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.