நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்பிலும் அவதானம்!
“மீண்டும் ஊருக்கு போகலாம்” என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வுகள் நேற்று (10.08.2024) நடைபெற்றன.
இன்நிலையில் இன்று குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்வை பார்வையிட்டதுடன் அதன் நோக்கம் மற்றும் எட்டப்பட்ட அடைவு தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருந்தார்.
முன்பதாக நெடுவூர்த் திருவிழா நிகழ்வானது நெடுந்தீவில் இம்மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் நேற்று 10 ஆம் திகதிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை இலங்கையின் கிராம சேவையாளர் பிரிவை வரையறுக்கும், முதலாவது கிராம சேவையாளர் பிரிவை கொண்டுள்ள நெடுந்தீவானது சுமார் 15 ஆயிரம் மக்கள் வாழ்ந்த ஓர் அழகான பிரதேசமாகும்.
ஆனால் இன்று அங்கு வாழும் மக்கள் தொகை மிகக் குறைவடைந்துள்ளது. வளப்பற்றாக்குறை மற்றும் ஏனைய வசதி வாய்ப்புகள் இல்லாமை காரணமாக இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும் வேறு பிரதேசங்களுக்கும் சென்றுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மண்ணையும் மக்களையும் பாதுகாத்து நிலைபேறான அபிவிருத்தியை நெடுந்தீவில் ஏற்படுத்தும் பொருட்டு நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரால் இந்த நெடுவூர் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட புலம்பெயர் நாட்டில் வசிக்கும் மக்கள் பங்காளிப்புடன் நெடுந்தீவு மக்களும் இணைந்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் நெடுவூர் திருவிழாவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் விவசாய கண்காட்சி, மூலிகை கண்காட்சி, கல்வி சார்ந்த காட்சி, உள்ளூர் உற்பத்தி, பாரம்பரிய விளையாட்டுக்கள், பாரம்பரிய உணவு கொண்டாட்டங்கள், புத்தக வெளியீடு உட்கட்டுமான் அபிவிருத்தி தொடர்பான தளங்களைப் பார்வையிடல், சுற்றுச்சூழல் கண்காட்சிகள், முத்தமிழ் கலை நிகழ்வுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சிறுகதை கட்டுரை கவிதை போட்டிகள் பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.
நாட்டில் இடம்பெற்ற அழிவு யுத்தம் மற்றும் பொருளாதார அசாதாரண நிலைமைகள் போன்ற காரணங்களால் நெடுந்தீவில் வாழ்ந்து திக்கெங்கும் சிதறுண்டு போனோரெல்லாம் உலகின் பல பாகங்களிலும் வெளி மாவட்டங்களிலும் பரந்து வாழும் இச்சூழலில் அவர்களை ஒன்றிணைந்து கடந்த கால வாழ்வியலை மகிழ்வோடு மீட்டுப் பார்க்கும் அழகிய தருணமாக இந்த நெடுவூர்த் திருவிழா அமைப்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பல்துறை சார்ந்த நிகழ்வுகள் நெடுந்தீவின் உறவுகளின் பங்களிப்புடன் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.