;
Athirady Tamil News

மலையக மக்களின் ஆதரவு சஜித்துக்கு! திகாம்பரம் உறுதி

0

மலையக மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் (Palany Thigambaram) தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் கூட்டம் நேற்று (10.08.2024) ஹட்டனில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தொழில் அமைச்சராக இருந்த மனுச நாணயக்காரவும் வீரவசனம் பேசினர்.

ஜனாதிபதிக்கு சவால்

எனினும், அந்த சம்பள உயர்வு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் கம்பனிக்காரர்களிடம் கூறி வழக்குபோட சொன்னதாக என்மீது மனுஷ நாணயக்கார இப்போது குற்றச்சாட்டு முன்வைக்கின்றார்.

இந்த குற்றச்சாட்டை நான் நிராகரிக்கின்றேன். மலையக மக்களை நான் ஒருபோதும் காட்டிக்கொடுத்தது கிடையாது. தங்களால் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதற்காக தற்போது பந்தை என் பக்கம் வீசுகின்றனர். ஜனாதிபதியும், மனுஷ நாணயக்காரவும் பொய்யர்கள் என்பது உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார். மலையக மக்களும் அவருக்கே வாக்களிப்பார்கள். மாறாக துரோகம் செய்தவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். சஜித் பிரேமதாச ஆட்சியில் காணி உரிமை, வீட்டு உரிமை, கல்வி உரிமை என அத்தனை உரிமைகளும் கிடைக்கப்பெறும்.

முடிந்தால் மலையக மக்கள் வாக்குகளை பெற்றுக்காட்டுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றேன்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.