76,000 மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட புடின்: திருப்பியடிக்கத் தொடங்கிய உக்ரைன்
ரஷ்யாவுக்குள் அதிரடியாக நுழைந்துள்ள உக்ரைன் படைகளால் திகைத்துப் போன விளாடிமிர் புடின் போரினால் பாதிக்கப்பட்ட குர்ஸ்க் பகுதியிலிருந்து 76,000 குடியிருப்பாளர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
2ம் உலகப்போருக்கு பின்னர்
உக்ரைன் படைகளின் அதிரடி நடவடிக்கை காரணமாக ரஷ்ய எல்லையில் குடியிருக்கும் மக்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர். 2ம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்யா மீதான படையெடுப்பாக உக்ரைனின் இந்த நடவடிக்கையை பார்க்கப்படுகிறது.
2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா திடீரென்று உக்ரைன் மீது படையெடுக்க, செய்வதறியாது திகைத்துப் போன உக்ரைன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, புடின் ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
தற்போது குர்ஸ்க் பிராந்தியத்தில் அதிரடியாக நுழைந்துள்ள உக்ரைன் ராணுவத்தின் துரித நடவடிக்கைகளால் ரஷ்யா தடுமாறி வருவதாகவே கூறப்படுகிறது. பெரும் திரளான மக்களை எல்லையோர பிராந்தியங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
8 பகுதிகளில் மொத்தம் 60 முகாம்களை ரஷ்ய அதிகாரிகள் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் படையெடுப்பால் தடுமாற்றத்தில் இருக்கும் புடின் பயந்து விட்டதாகவே கூறப்படுகிறது.
விளாடிமிர் புடின் தீவிரம்
ரஷ்யா மீதான படையெடுப்பில் ஆயிரக்கணக்கான உக்ரைன் படைகள் ஈடுபட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதுடன், முக்கியமான விமான தளம் ஒன்றை மொத்தமாக சேதப்படுத்தி, புடினுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளனர்.
உக்ரைன் படைகளுக்கு அஞ்சி, முக்கிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 76,000 பேர்கள் தற்போது வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் படைகள் மேலும் முன்னேறி சேதங்களை ஏற்படுத்தும் முன்னர் தடுக்கும் பொருட்டு விளாடிமிர் புடின் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், உக்ரைன் மீதான தாக்குதலையும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.