பழி வாங்கத் துடிக்கும் ஈரான்… இரவோடு இரவாக இஸ்ரேல் மீது சம்பவம் செய்த ஹிஸ்புல்லா
இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரவோடு இரவாக வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணை மழை பொழிந்துள்ளது.
பழி தீர்க்க காத்திருப்பதாக தகவல்
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவருக்கு ஆதரவாக இஸ்ரேலை பழி தீர்க்க ஈரான் காத்திருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் உளவு அமைப்புகளின் சமீபத்திய தகவலின் அடிப்படையில் இன்னும் ஒருசில நாட்களில் ஈரான் முழு வீச்சிலான தாக்குதலை தொடுக்கும் என்றே கூறப்படுகிறது.
இதனால் மத்திய கிழக்கில் போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. அத்துடன் இஸ்ரேலை எந்த நெருக்கடியில் இருந்தும் காப்பது தங்களின் கடமை என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிறு இரவு ஹிஸ்புல்லா படைகள் சுமார் 30 ஏவுகணைகள் வீசியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவும் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், இஸ்ரேல் ராணுவ தளங்களை இலக்கு வைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா படையில் மொத்தம் 50,000 வீரர்கள் போருக்கு தயாராக உள்ளனர். தங்களின் தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்க வேண்டும் என்ற ஆவேசத்தில் உள்ளனர்.
ஈரானிடம் 10 லட்சம் வீரர்கள்
அதேவேளை, ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் உள்ளது ஈரான். காஸா போர் தொடங்கியதன் பின்னர், கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லாவை சீண்டி வருகிறது.
ஹிஸ்புல்லாவும் தொடர்ந்து பதிலடி அளித்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமைக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை முன்னெடுக்கும் என்றே நம்பப்படுகிறது.
இஸ்ரேல் உளவு அமைப்புகளும் இதே தகவலை அமெரிக்காவிடம் பகிர்ந்துகொண்டுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதலை தொடுக்கும் என்றே இதுவரை இஸ்ரேல் எதிர்பார்த்து வந்தது. ஆனால் தற்போது ஈரான் நேரிடையாக களமிறங்குவதாகவே தகவல் கசிந்துள்ளது.
ஈரானிடம் 10 லட்சம் வீரர்களும் 4000 போர் விமானங்களும் 13,000 ராணுவ டாங்கிகளும் 600 போர் கப்பல்களும் 3,000 ஏவுகணையும் உள்ளது. ஹிஸ்புல்லாவிடம் 50,000 வீரர்களும் 2 லட்சம் ஏவுகணைகளும் உள்ளது.
ஆனால் இஸ்ரேலிடம் 6 லட்சம் வீரர்களும், 600 போர் விமானங்களும், 1300 டாங்கிகளும், 7 போர் கப்பல்களும் 90 அணு ஆயுதங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.