76,000 மக்கள் இடமாற்றம்..ஒரே இரவில் 18 உக்ரைனிய ட்ரோன்கள் அழிப்பு
உக்ரைனின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில் 76,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
சனிக்கிழமையன்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது உரையில், “போரை ஆக்கிரமிப்பாளர்களின் எல்லைக்குள் தள்ளுகிறோம்…அதை நிரூபிப்பதன் மூலம் ஆக்கிரமிப்பாளர் மீது நீதியையும், அழுத்தத்தையும் கொண்டுவர முடியும்” என்றார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான சண்டை நீடித்து வரும் நிலையில், கீவ்வின் படைகள் ரஷ்ய எல்லைக்குள் தங்கள் தொடர்ச்சியான தாக்குதலின் ஒரு பகுதியாக வெளிப்படையான முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குர்ஸ்க், பெல்கோரோட் பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் மக்களை, உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளை வெளியேற உத்தரவிட்டனர்.
உக்ரைனியப் படைகள் கடந்த ஒரு வார காலமாக எல்லைத்தாண்டிய தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து 76,000க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிகமாக, குர்ஸ்க் பிராந்தியத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவசர அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், பெல்கோரோட் பிராந்தியத்தில் Krasnoyaruzhsky மாவட்டத்தை விட்டு வெளியேற்ற ஆளுநர் Vyacheslav Gladkov உத்தரவிட்டார்.
அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் “பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் நலன்களுக்காக, Krasnoyaruzhskyயில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றத் தொடங்குகிறோம்” என கூறினார்.
முன்னதாக, ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் 18 உக்ரைனிய ட்ரோன்களை ஒரே இரவில் அழித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.