சுவிட்சர்லாந்துக்கு பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தேவை: புலம்பெயர்ந்தோருக்கும் வாய்ப்பளிக்க பரிந்துரை
சுவிட்சர்லாந்தில் 2030ஆம் ஆண்டுவாக்கில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள்.
2029இல் மட்டுமே 130,000 பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அந்த காலியிடங்களை நிரப்ப போதுமான பணியாளர்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கமாட்டார்கள் என சர்வதேச நாணய நிதியமும், Raiffeisen வங்கியும் தெரிவித்துள்ளன.
ஆக, அப்படி காலியான இடங்களை நிரப்ப சுவிட்சர்லாந்தில் ஆட்கள் இல்லையானால், சுமார் 200,000 பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்.
2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில், சுமார் 114,000 பணியிடங்கள் காலியாக இருந்ததாக பெடரல் புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மருத்துவத்துறை நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் பெரும் பிரச்சினை காணப்படுகிறது.
பணியிடங்களை நிரப்புவது எப்படி?
ஆக, இப்படி காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம், Raiffeisen வங்கி முதலான அமைப்புகள் சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளன.
ஓய்வு பெறும் வயதை அதிகரித்தல், படித்துவிட்டு, வீட்டில் குழந்தைகளை கவனித்துக்கொண்டிருக்கும் தாய்மாரை வேலைக்கு வரவழைத்தல், அவர்களுடைய பிள்ளைகளை பகல் நேரக் காப்பகங்களில் விட உதவிகள் செய்தல், ‘marriage penalty’ என்னும் திருமணம் ஆனவர்கள் கூடுதல் வரி செலுத்தும் நிலையை ரத்து செய்தல் ஆகிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் புலம்பெயர்ந்தோர்
சுவிட்சர்லாந்தில் தற்போது புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகம் காணப்படும் நிலையிலும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக Raiffeisen வங்கி தெரிவித்துள்ளது.
ஆக, புலம்பெயர் திறன்மிகுப் பணியாளர்களைக் கவரும் வகையிலும், அவர்களை சுவிட்சர்லாந்தில் தக்கவைக்கும் வகையிலும், புலம்பெயர்தல் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என OECD அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.