இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று(12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(13) இரண்டாவது நாளாக தொடர்கிறது.
அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இரண்டாவது நாளாக இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்த ஒன்றியத்தின் அழைப்பாளர் ஜெகத் சந்திரலால் தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கை
இதேவேளை நேற்றில் இருந்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை எதிர்ப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
சுயாதீனமான கிராம உத்தியோகத்தர் சேவை யாப்பு வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
இந்த எதிர்ப்பு வாரத்திற்குள் குறித்த வர்த்தமானியை இரத்து செய்ய வேண்டும் எனவும் அல்லது கிராம உத்தியோகத்தர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை கேட்டறிந்து அவற்றை உள்ளடக்கிய திருத்தப்பட்ட வர்த்தமானியை வெளியிடுமாறும் கூட்டணியின் இணைத்தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.