உதயநிதியின் சனாதன பேச்சு..பாய்ந்த 5 வழக்குகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சனாதன ஒழிப்பு பேச்சு
கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு’ சென்னையில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்’” என்று பேசி இருந்தார்.
இவரின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது ராஜஸ்தான், உ.பி. மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் புகார் அளிக்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி
இந்த வழக்குகளை எல்லாம் ஒரே வழக்காக இணைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ரிட் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது.ரிட் மனுவில் திருத்தம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்று வாரகாலம் அவகாசம் அளித்து, விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
ரிட் மனு தொடர்பாக பதிலளிக்க மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜம்மு-காஷ்மீர், கர்நாடக மாநில அரசுகளுக்கும், புகார்தாரர்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என கடந்த மே 10-ம் தேதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது .
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.