“கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும்” – காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி வருங்காலங்களில் தமிழ்நாட்டிற்கு பில்லிக்குண்டுலுவில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு, காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 101 ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வழியாக நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை கூடுதலாக 97 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலிகுண்டுலுவில் 56.7 டிஎம்சிக்கு பதில் 153 டிஎம்சி நீரை விடுவித்ததாக கர்நாடகா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அணைகள் நிரம்பிய பிறகே நீர் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை காவிரி படுகையில் இயல்பைவிட தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்துள்ளதாகவும்,
மேலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கூறியதை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதனால், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்தினர்.