64 அடி உயர தேர் – திடீரென சரிந்து விழுந்து விபத்து
விழுப்புரம் மாவட்டத்தில் தேர் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அருகே உள்ள கடையம் கிராமத்தில் பழமை வாய்ந்த சூலப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 2022 ஆண்டில் தேர் திருவிழா நடைபெற்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று நடைபெற்றுள்ளது. 64 அடி உயரம், 3 டன் எடை கொண்ட இந்த தேரினை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 300 பேர் தோளில் சுமந்தவாரு கிராமத்தினை சுற்றி வருவர்.
இன்று காலையில் தேரினை சுமந்தபடி இளைஞர்கள் சென்றபோது தேரானது சரிந்து கீழே விழுந்தது. தேர் கீழே விழுந்ததில் ஐந்து நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதனையடுத்து சாய்ந்த தேரினை மீண்டும் தூக்கி நிறுத்தி மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.