பதவியிலிருந்து நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர்
தாய்லாந்து (Thailand) பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியலமைப்பை கடுமைாக மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் நேற்று (14) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதன் அடிப்படையில் இப்பதவி நீக்க உத்தரவு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பளித்த நீதிமன்றம்
கடந்த ஆண்டு தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற தாய்லாந்தின் பிரபலமான முற்போக்கு கட்சியை (Move Forward) நீதிமன்றம் கலைத்து, அதன் தலைவர்களை 10 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து தடை செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஸ்ரேத்தா சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரை அமைச்சரவையில் நியமித்ததன் மூலம் நெறிமுறை விதிகளை மீறியதாக பாங்கொக்கின் அரசியலமைப்பு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (07) தீர்ப்பளித்தது.
இதேவேளை நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளில் ஐந்து பேர், ஸ்ரேத்தாவையும் அவரது அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்வதாக வாக்களித்தனையடுத்து தாய்லாந்தில் அரசியலமைப்பின் படி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.