உக்ரைன் படையெடுப்பு : ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசர நிலை பிரகடனம்
ரஷ்யாவின்(russia) குர்ஸ்க் பகுதியில் பாரிய எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி 1000 சதுர பரப்பளவை கைப்பற்றியதாக அறிவித்துள்ள உக்ரைனிய படைகள் மற்றுமொரு பகுதியையும் (பெல்கோரோட்) (Belgorod )தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதனால் அந்த பிராந்திய ஆளுநர் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
சுமார் 200,000 மக்கள் எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் இடைவிடாத குண்டுவீச்சு தாக்குதலை மேற்கொள்வதாக குற்றம் சாட்டிய, பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் புதன்கிழமை அவசரகால நிலையை அறிவித்தார்.
நிலைமை மிகவும் கடினமாகவும் பதட்டமாகவும் தொடர்கிறது
“பெல்கோரோட் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாகவும் பதட்டமாகவும் தொடர்கிறது” என்று வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார்.
உக்ரைனின் ஆயுதப் படைகளின் தினசரி ஷெல் தாக்குதல்கள் வீடுகளை அழித்தன, மேலும் பொதுமக்களைக் கொன்றது மற்றும் காயப்படுத்தியது, என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவசர நிலை பிரகடனம்
“எனவே, பெல்கோரோட் பகுதி முழுவதும் பிராந்திய அவசரநிலையை அறிவிக்க இன்று(14) முதல் நாங்கள் ஒரு முடிவை எடுக்கிறோம் … கூட்டாட்சி அவசரநிலையை அறிவிக்க அரசாங்கத்திடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கிறோம்.”
பெல்கோரோடும் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கட்டிடங்களுக்குச் சில சேதங்கள் ஏற்பட்டதாகவும் கிளாட்கோவ் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில், பெல்கோரோட் எல்லை மாவட்டமான கிராஸ்னோயாருஸ்கியில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதாக அறிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), இந்த தாக்குதல் ரஷ்ய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக ரஷ்யாவை அமைதிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழி என்று கூறினார்.
இதேவேளை உக்ரைன் குர்ஸ்க் பிராந்தியத்தைத் தாக்குவதன் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை “நீண்ட தூரத்தில்” வைத்துள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புத் தூதர் குறிப்பிட்டார். ரோடியன் மிரோஷ்னிக் உக்ரைனின் ஊடுருவலை “பயங்கரவாத நடவடிக்கை” என்றும் தெரிவித்தார்.