பிரித்தானியாவில் ஆயிரத்துக்கும் மேலானோர் கைது: கலவரப் பின்னணி
பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேலானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியாவில் ஆயிரத்துக்கும் மேலானோர் கைது
ஜூலை மாதம் 29ஆம் திகதி, மூன்று குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த வன்முறை நாடு முழுவதும் பரவியது.
இங்கிலாந்திலும் வட அயர்லாந்திலும் பல நகரங்கள் கலவர பூமியாகின.
குழந்தைகளைக் கொன்ற நபர் புகலிடக்கோரிக்கையாளர், இஸ்லாமியர் என சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவ, வலதுசாரியினர் வன்முறையில் இறங்கினார்கள்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹொட்டல்கள் முன் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்லெறிதல், தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதுடன் பொலிசாருடன் மோதலிலும் ஈடுபட்டார்கள்.
இப்படி வன்முறையில் இறங்கியவர்களில் சிறுவர்களும் அடக்கம். ஆக, விரைந்து செயல்பட்ட பொலிசார் சம்பந்தப்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்ய, அதைவிட விரைவாக நீதிமன்றங்கள் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சுமார் 575 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டவர்களும், அவர்களைத் தூண்டிவிட்டவர்களும், நீண்ட காலம் சிறையில் செலவிடவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.