சுவிஸ் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்: உயிர் பலி வாங்கிய சலுகை
பிரித்தானியாவில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கொலை வழக்கில், அவரைக் கொலை செய்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தும், அவரது மருத்துவர்கள் அதற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தற்போது சுவிட்சர்லாந்தில் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், தனியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதால் ஒரு உயிர் பலியாகியுள்ளது.
வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட நோயாளி
2005ஆம் ஆண்டு, paranoid schizophrenia என்னும் பிரச்சினை உட்பட பல மன நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் தனது சகோதரரை கொடூரமாகத் தாக்கியதற்காக பேசலிலுள்ள மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2014ஆம் ஆண்டு மருத்துவமனையிலிருந்து தப்பிய அவர், இரண்டு பெண்களைக் கொலை செய்துவிட்டார். 2015ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு மீண்டும் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர்.
ஆனால், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவருக்கு மருத்துவமனையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலில், ஒரு ஊழியர் உடன் வர, அவர் மருத்துவமனை வளாகத்தில் உலாவ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிறகு, தனியாகவே கொஞ்சம் நேரம் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிர் பலி வாங்கிய சலுகை
ஆனால், வியாழக்கிழமை தனியே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட அந்த நபர், மீண்டும் ஒரு 75 வயதுப் பெண்ணை கொலை செய்துவிட்டார்.
வெள்ளிக்கிழமை மதியம் பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள்.
மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டும், அவரை தனியாக வெளியே செல்ல மருத்துவமனை அனுமதித்துள்ளது.
விளைவு? அவருக்கு அளிக்கப்பட்ட சலுகையால் மீண்டும் ஒரு உயிர் பலியாகிவிட்டது.
மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஒருவரை வெளியே செல்ல அனுமதிக்கவேண்டுமானால், அவரது மருத்துவர்கள் அவரை முழுமையாக பரிசோதித்து, அவரை வெளியே விடுவதால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என உறுதியானால்தான் அவரை வெளியே விடவேண்டும்.
ஆனால், பலமுறை குற்றச்செயல்களில் ஈடுபட்ட, அதுவும் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை, மருத்துவர்கள் தனியாக வெளியே செல்ல அனுமதித்துள்ளார்கள். அவர் மீண்டும் ஒருவரைக் கொலை செய்துவிட்டார்.
ஆகவே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.