பாதாள உலகக் குழுக்களுக்கெதிரான புதிய நிறுவனம்: ஜனாதிபதி பரிந்துரை!
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதாள உலகில் உள்ள தனிநபர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பரிந்துரைத்துள்ளார்.
இதேவேளை குறித்த செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட சட்டங்களை அறிமுகப்படுத்தவும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
சிறி ஜயவர்தனபுரவில் (Sri Jayawardanapura) காவல்துறை விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப்படைக் கட்டளையை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சிவில் அமைப்பு
குறித்த மையமானது, அனைத்து காவல்துறை, இராணுவம் மற்றும் சிவில் அமைப்புகளை நியமிக்கப்பட்ட அதிகாரங்களுடன், ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மையத்தில் உள்ள சிறப்புக் குழுக்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள், வன்முறை, தீவிரவாதம், மற்றும் பிற நெருக்கடிகள் போன்ற அவசர நிலைகளைக் கையாளும் என கூறப்படுகின்றது.
அடிப்படை உரிமை
இந்த நிலையில், பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நாட்டை குழிபறிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்துவது இன்றியமையாதது என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.