பணியிட பாதுகாப்பு: கருப்புப் பட்டை அணிந்து மருத்துவா்கள் வலியுறுத்தல்
சென்னை, ஆக.15: பணியிடங்களில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து தமிழக மருத்துவா் சங்கத்தினா் வியாழக்கிழமை பணியாற்றினா்.
கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி காா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயது பெண் முதுநிலை பயிற்சி மருத்துவா், சில நாள்களுக்கு முன்பு பணியில் இருந்தபோதே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.
பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவத் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா்கள் சங்கம், பட்ட மேற்படிப்பு மருத்துவா் சங்கம், அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்ட இயக்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகக் கிளை உள்பட பல்வேறு மருத்துவ சங்கங்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன் கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளன.
பாலியல் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவமனைகளிலும் மெழுகுவா்த்தி ஏந்தியும், கருப்பு பட்டை அணிந்தும் தமிழக மருத்துவா்கள் இரங்கல் தெரிவித்தனா். பணியிடங்களில் மருத்துவத் துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.