தயவு செய்து பிரித்தானியாவுக்கு வாருங்கள்… தடாலடியாக சர்வதேச மாணவர்கள் காலில் விழுந்த அமைச்சர்
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, அதைக் குறைக்கவேண்டும் என்னும் ஒரே விடயத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தது ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி.
பிரித்தானிய மக்கள் எல்லோருமே புலம்பெயர்தலுக்கு எதிரானவர்கள் என்னும் ஒரு தோற்றத்தையும் உருவாக்கிவைத்திருந்தது அக்கட்சி.
இவர்கள் மறைமுகமாகத் தங்களை தூண்டிவிடுவதை அறியாமல் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒரு கூட்டம் புறப்பட, புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கிய ஒரு கூட்டம், நறுக்கென அவர்கள் தலையில் குட்டுவைத்திருக்கிறது.
விளைவு, யாரோ தூண்டிவிட்டதால் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக புறப்பட்ட ஒரு கூட்டம், சிறு பிள்ளைகள் உட்பட, சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது.
மட்டமான அரசியல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், தானாகவே பிரதமர் இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்ட ரிஷி சுனக், இருக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்தார்.
அவரது உள்துறைச் செயலர்கள், ஆமாம் சாமி போட்டு புலம்பெயர்தலுக்கெதிராக கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார்கள்.
ஆனால், மக்கள், தேர்தலில் அவர்களுக்கு ‘டாட்டா பை பை’ சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
புலம்பெயர்தலுக்கெதிரான நடவடிக்கைகளின் பாதிப்புகள்
எத்தனை வருடம் அரசியல் செய்தாலும், புலம்பெயர்தல் இல்லாமல் உலகப் பொருளாதாரம் சீராக இருக்காது என்ற உண்மை அரசியல்வாதிகள் பலருக்கும் புரியவில்லை.
புரிந்தாலும், அமைச்சர் பதவி போய்விடக்கூடாது என்பதற்காக புலம்பெயர்தல் எதிர்ப்பு என்னும் கேடயத்தை பிடித்துக்கொண்டு நின்றாலும், அது ரொம்ப காலத்துக்கு எடுபடாது என்பது இப்போது சிலருக்கு புரிந்திருக்கிறது போலிருக்கிறது.
ஆம், சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை பிரித்தானியாவில் அதிகரித்துவிட்டது, அதுவும், இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று வெளிப்படையாகவே கூறிய இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் இருந்த இடமே இப்போது தெரியவில்லை.
ஆனால், அவர்கள் சர்வதேச மாணவர்களுக்கெதிராக எடுத்த நடவடிக்ககளால் சலித்துப்போன மாணவர்கள் வேறு நாடுகள் பக்கம் திரும்பிவிட்டார்கள்.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய வருவாய் சர்வதேச மாணவர்களால்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும், இந்த மட்டமான அரசியல்வாதிகள், பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலக இருண்டுவிடும் என்பதுபோல, சர்வதேச மாணவர்களுக்கு எரிச்சலூட்டிக்கொண்டே இருந்தார்கள்.
இன்று, பிரித்தானியாவுக்கு கல்வி கற்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைய, பலக்லைக்கழகங்கள் வருமானத்துக்கு வழி இல்லாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கின்றன.
உங்களால்தான் எங்களுக்கு இந்த நிலை என பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அமைச்சர்களைக் கைநீட்ட, அவர்களோ, நீங்களெல்லாம் தன்னாட்சி கல்லூரிகள், உங்கள் பிரச்சினையை நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என கையைக்கழுவிவிட்டார்கள்.
சர்வதேச மாணவர்கள் காலில் விழுந்த அமைச்சர்
ஆக, வருவாய்க்கு வழி இல்லாமல் திகைக்கும் பல்கலைக்கழகங்கள் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்க, தயவு செய்து பிரித்தானியாவுக்கு வாருங்கள் என சர்வதேச மாணவர்கள் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்திருக்கிறார், பிரித்தானிய, கல்விக்கான மாகாணச் செயலரான Bridget Phillipson.
பிரித்தானியாவுக்கு வாருங்கள், நான் புதிய அமைச்சர் (பழைய ஆட்களெல்லாம் போய்விட்டார்கள்), தகுதி படைத்த மாணவர்கள் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் படிக்க வந்தால் பிரித்தானியா உங்களை வரவேற்கும்.
உங்கள் கல்வியை முடிக்க உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறோம், படித்து முடித்தபிறகும், உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப, இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் பிரித்தானியாவில் வேலையும் செய்யலாம் என்று வீடியோ செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் Bridget Phillipson.
பிரித்தானியா கல்வி கற்க அருமையான இடம். டார்வின் வாழ்ந்த நாட்டில் அறிவியல் கற்பதும், ஷேக்ஸ்பியர் வாழ்ந்த நாட்டில் ஆங்கிலம் கற்பதும் ஜான் லென்னன், அடீல் முதலானோர் வாழும் நாட்டில் இசை கற்பதும் கௌரவமான விடயம் அல்லவா?
ஆகவே, உலகம் முழுவதிலுமுள்ள சர்வதேச மாணவர்களை பிரித்தானியாவுக்கு கல்வி கற்க அழைக்கிறோம். நீங்கள் பிரித்தானிய மாணவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளலாம்.
ஏனென்றால், மாணவர்களுக்கிடையே ஏற்படும் நட்பு, நாடுகளுக்கிடையே ஏற்படும் நட்பு என்று கூறியுள்ளார் Bridget Phillipson. காலதாமதமானாலும், புத்திவந்தால் சரிதான்!