;
Athirady Tamil News

ISRO : விண்ணில் பாய்ந்தது புவி கண்காணிப்புக்கான EOS-8 செயற்கைக் கோள்… வெற்றிகரமாக நிலை நிறுத்தம்

0

புவி கண்காணிப்புக்கான EOS 08 எனும் செயற்கைக்கோளை சுமந்தவாறு SSLV D3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன EOS 08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. EOS 08 செயற்கைக்கோளில் 3 ஆராய்ச்சிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் ஓராண்டு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. EOS 08 செயற்கைக்கோள், சிறிய ரக SSLV D3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

SSLV D3 ராக்கெட் திட்டமிட்ட நேரத்தில் பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடங்களில், 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில், செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணிக்கும் என்றும், பேரிடர், சுற்றுச்சூழல், தீ போன்றவற்றை கண்காணிக்க பயனுள்ளதாக இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESO 08 செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இதன்மூலம் SSLV D3 ராக்கெட் திட்டம் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.