இந்திய மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
கொல்கத்தாவில் இயங்கி வந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த பெண் மருத்துவர், கடந்த வாரம் வியாழக்கிழமை (ஆக. 8) இரவுப் பணிக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ‘மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டத்தில்’ விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டுமென்பதையும், ஓரிரு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும் இந்திய உறைவிட மருத்துவா்கள் சங்க சம்மேளனம் (எஃப்ஓஆா்டிஏ) கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதன் காரணமாக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
மேலும், மத்திய அரசு வெறும் வாக்குறுதிகளை அளித்தால் மட்டும் போதாது என்று கூறிய மருத்துவர்கள், இன்று (ஆக. 17) வேலை நிறுத்தப் போராட்டம் செய்யவிருப்பதாக, ஆக. 12, திங்கள்கிழமையில் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை முதல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் தொடங்கியது. 24 மணிநேரத்திற்கு புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவும், அத்தியாவசப் பிரிவு மட்டும் இயங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.