பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: பிரதமருக்கு மருத்துவர்கள் கடிதம்!
இந்திய மருத்துவர்கள் சங்கம்(ஐஎம்ஏ) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கிலும் மருத்துவர்கள் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை(ஆக. 17) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அவர்களது கடிதத்தில், கடந்த 2020-ஆம் ஆண்டில் தொற்றுநோய்ச் சட்டம் 1897இல் வரையறுக்கப்பட்டுள்ள திருத்தங்களை, ‘சுகாதாரத்துறை சேவைகள் பணியாளர்கள் மற்றும் மருத்துவ அமைப்பு’ வரைவு மசோதாவில் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையும் முன்வைத்துள்ளனர் மருத்துவர்கள். அதன்படி, விமான நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு சற்றும் குறையாமல் மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். கண்காணிப்புக் கேமராக்கள், போதுமான பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
மேலும், உயிரிழந்த மருத்துவர் 36 மணி நேரம் பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள், இதன்காரணமக அவர் ஓய்வெடுக்க தனி அறை இல்லாத காரணத்தால், கருத்தரங்கினுள் ஓய்வெடுக்கச் சென்றதையும் மேற்கோள் காட்டியுள்ளனர்(பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கருத்தரங்கில் ஓய்வெடுக்கச் சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணை அறிக்கை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது).
இந்த நிலையில், இரவு வேளைகளில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவமனையில் முறையான கழிப்பிட வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த கொலை வழக்கில் முழுமையான விசாரணையை விரைவில் மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மருத்துவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.